மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் அன்சாரி


லகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரியில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு துணை ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.

கலவரத்தில் நீங்கள் சிக்கியிருந்த அந்தக் காலகட்டத்தை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?

நான் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நாட்டுக்கே தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயம் மட்டும் சொல்வேன். நான் அன்றைக்குச் செத்துவிட்டேன். அப்படியான நிலையில் உயிர் மட்டும் உள்ள ஒரு பிணமாகத்தான் இருந்தேன். கடவுள் அருளால் பிழைத்தேன்.

ஆளும் கட்சியிடமிருந்து உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா?

நான் இதெல்லாம்பற்றிப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஏதோ இருக்கும் காலத்தைக் கொஞ்சமாவது நிம்மதியுடன் வாழ நாங்கள் நினைக்கிறோம்.

மன்னியுங்கள்... அந்தப் படம் இன்னமும் உங்களைத் துரத்துகிறதா?

இங்கே குதுப் வீடு எது, எங்கிருக்கிறது என்று கேட்டால், யாராவது ஒருவர் வழிகாட்டிவிடுவார். ஒரு சாமானிய வாழ்க்கை வாழ்பவனுக்கு இப்படிப்பட்ட அடையாளம் சுமை. (அருகில் உள்ள மேஜைக்கு அடியில் உள்ள ஒரு பெரிய பையை எடுப்பவர் அதிலிருந்து நான்கு புகைப்படங்களை எடுத்துக் காட்டுகிறார். சமீபத்தில் வெளியான ஒரு இந்திப் படத்தின் ஒரு பாத்திரம், சுவரில் மாட்டியிருக்கும் குதுப் படத்தைத் துப்பாக்கியால் குறிபார்க்கும் படங்கள் அவை. அவற்றைக் காட்டிச் சொல்கிறார்...) இப்படி எவ்வளவோ இடங்களில் தேவையே இல்லாமல் நான் குறிவைக்கப்படுகிறேன்.

கலவரங்களின்போது முற்றிலுமாகத் தீக்கிரையான பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்போது ஓரளவுக்கு எல்லா வீடுகளுமே புதுப்பித்துக் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் உதவியதா?

நாங்கள் இப்போது முன்பைவிட மேம்பட்டிருக்கிறோம் என்றால், முன்பைவிடக் கடுமையாக உழைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்துக்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றுதான் காரணம்.

மிகக் கடுமையான வன்முறையைப் பார்த்த நீங்கள், அந்த அரசாங்கமும் உங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், பின் எந்த நம்பிக்கையில் மீண்டும் குஜராத் திரும்பினீர்கள்?

இரண்டு நம்பிக்கைகள். ஒன்று, இந்த குஜராத்தான் எங்கள் பூர்வீக மண். என் தந்தையும் தாத்தாவும் அவர் முன்னோர்களும் பிறந்து வளர்ந்த மண். இத்தனை தலை முறைகளாக எங்களைக் காத்த மண் கைவிட்டுவிடாது என்ற நம்பிக்கை. இன்னொரு நம்பிக்கை, இத்தனை தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில்தான் நாங்கள் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.

அற்புதமான விஷயம். இந்த நன்னம்பிக்கை துளிர்விட எது காரணமாக அமைந்தது என்று தெரிந்துகொள்ளலாமா?

கலவரத்தின்போது ஏதோ ஒரு தீய சக்தி எல்லோரையும் இயக்கியதேயன்றி, கலவரத்துக்குப் பின் எல்லோரையுமே இந்தக் கலவரம் சங்கடப்பட வைத்தது. இங்கே எங்களுக்கு நிறைய இந்து சகோதரர்கள் உதவினார்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்த சின்ன உதவிகள்கூட எங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. என்னை மீண்டும் குஜராத்துக்கே அழைத்தவர்களில் இந்து நண்பர்களும் உண்டு. இந்தக் காரணங்கள்தான் என் நம்பிக் கைக்கான அடிப்படை.

மோடியைப் பற்றியும் அவருடைய ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடி முஸ்லிம்களுக்காக நிறையச் செய்திருப்பதாகவும் அவருக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது...

எனக்குத் தெரிந்து இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட் காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்ற வர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை.

கலவரத்துக்குப் பின், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கையைப் பெற அவர் ஒன்றுமே செய்யவில்லையா?

உங்களுக்கு அசோக் மோச்சியைத் தெரியும்தானே... குஜராத் கலவரத்தில் என் புகைப்படத்தைப் போலவே, கத்தியுடன் கைகளை உயர்த்தியபடி சத்தமிடும் அவர் படமும் பிரபலம். பின்னாளில் அவர் மனம் மாறினார். முஸ்லிம்களுக்குத் தான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்டார். இன்றைக்கு என் குடும்பத்தில் அவரும் ஒருவர். மோடிஜி அப்படியெல்லாம் ஒரு வார்த்தை வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்றைக்கு இந்தியா முழுவதும் மோடியைப் பற்றியும் அவர் குஜராத்தில் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லப்படும் வளர்ச்சியைப் பற்றியும்தானே பேசுகிறார்கள்...

ஒரேயொரு உதாரணம். சகோதரர் அசோக் மோச்சியையே எடுத்துக் கொள்வோம். அன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருந்தார், இன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருக்கிறார். வசதியானவர்கள் மேலும் வசதியாவதை நான் வளர்ச்சியாக நினைக்கவில்லை.

அப்படியென்றால், உங்கள் பார்வையில் எதை வளர்ச்சியாக - ஒரு அரசாங்கம் உருவாக்க வேண்டிய விஷயமாக - கருதுகிறீர்கள்?

காலையில் எழுந்திருக்கிறோம். வேலைக்குப் போகிறோம். கடுமையாக உழைக்கிறோம். மாலையில் வீடு திரும்புகிறோம். இரவாவது குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட முடிய வேண்டும். அவர்களோடு நிம்மதியாகப் பேச முடிய வேண்டும். முக்கியமாக, பயம் இல்லாமல் தூங்க முடிய வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின், வளர்ச்சியின் வெளிப்பாடு. சந்தோஷமான சூழலின் வெளிப்பாடு. ஒரு அரசாங்கம் அதைத்தான் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பேட்டியில் என் கேள்விகள் முடிந்துவிட்டன. இந்தக் கேள்விகளுக்கு அப்பாலும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் எல்லோரும் சேர்ந்து வாழத்தான் இறைவன் இவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். இந்த நாட்டின் விசேஷமும் அதுதான். யாருக்காகவும் எதற்காகவும் நாம் பிரிந்து நிற்கக் கூடாது. இந்த நாட்டைச் சிதைத்துவிடக் கூடாது.

-ஆரத் தழுவி விடைகொடுக்கிறார் குதுப்.

ஏப்ரல் 2014, ‘தி இந்து’

4 கருத்துகள்:

  1. // கடவுள் அருளால் பிழைத்தேன்.// அன்சாரி பயன்படுத்திய வார்த்தைகள் என்ன? அல்லா என்று அவர் சொன்னதை கடவுள் என்று மாற்றியிருக்கிறீர்களா..? வெறுமனே தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மகாதேவன்: இந்த ஆராய்ச்சியெல்லாம் நன்றாக தான் செய்கிறோம்! நம் தேசத்தைதான் கைவிட்டு விடுகிறோம்! நீங்கள் ஈஸ்வரா என்பீர்கள்!முருகா என்பீர்கள்....சாதாரணன் அல்லா!என சொல்ல கூடாதா ?சொன்னால்தான் என்ன தவறு?

    பதிலளிநீக்கு
  3. This article has a lots of positive things. That man says, "Hindu friends protected me." Those points won't be visible to people like Mahadevan. What is so important in researching if Mr.Ansari said 'Allah' or simply 'God'? It's people like you who need to change psychologically...

    பதிலளிநீக்கு