அழிவு சக்தி!

            
              ப்பான் சுனாமி காட்சிகளை சேனல் சேனலாகத் தாவித் தாவிப் பார்த்துக்கொண்டே, நமது வீட்டுக்குள் நாம் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், அது உண்மையா?

                    ஜப்பான் அடுத்தடுத்து எதிர்கொண்டுவரும் நிலநடுக்கங்கள், சுனாமி, ஃபுகுஷிமா அணு உலையின் சிதைவிலிருந்து பரவும் கதிர்வீச்சு என ஜப்பானின் சோகம்... உலகத்துக்கே ஒரு பாடம். குறிப்பாக இந்தியாவுக்கு. ஜப்பானுக்கு நிலநடுக்கங்கள் புதிதல்ல; யுரேஷியன், பசிஃபிக், பிலிப்பைன்ஸ் கண்டத்திட்டுகள் சேரும் இடத்தின் அமைவிடம் டோக்கியோ. நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ள பிரதேசம். உலகிலேயே ஜப்பானில்தான் இதுவரை அதிக அளவு சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. வரலாற்றைப் புரட்டினால், சராசரியாக ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுனாமியை ஜப்பானியர்கள் எதிர்கொள்கிறார்கள். ஆனால், இந்த முறை ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கமும் சுனாமியும் ஜப்பானியர்களைப் பல ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க வைத்திருக்கின்றன. சுமார் 1,326 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டதாகக் கூறப்படும் 'ஹகுவா மஹா’ சுனாமிக் கதைகளையும் ஜப்பானின் மிக மோசமான நிலநடுக்கமான 1923-ம் வருடத்திய 'கான்டோ’ நிலநடுக்க நினைவுகளையும் ஜப்பானியர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அணு சக்தி தேவையா என்ற குரல் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன.

                    அபார இயற்கை வளங்கள் ஏதும் இல்லாத ஜப்பான், இரண்டாம் உலகப் போரின் மாபெரும் வீழ்ச்சிக்குப் பின் உலகின் பெரிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக உயரக் காரணம், அந்த நாட்டின் தொழில் துறை. அதன் உயிர்நாடி... மின்சாரம். அனல் மின் நிலையங்களோ, புனல் மின் நிலையங்களோ அமைக்க போதிய வளங்கள் இல்லாத நிலையில், தொடக்கத்தில் நாட்டின் பெரும் பகுதி எரிசக்தித் தேவைக்கு இறக்குமதி பெட்ரோலியப் பொருள்களையே நம்பி இருந்த ஜப்பான் ஒருகட்டத்தில் எந்தச் சக்தி தங்கள் நாட்டை அழித்ததோ... அந்தச் சக்தியையே ஆக்க சக்தியாகப் பயன்படுத்தியது. இன்றைக்கு உலகின் மூன்றாவது பெரிய அணுசக்திப் பயனீட்டாளர் ஜப்பான். ஏறத்தாழ 53 அணு மின் நிலையங்கள் ஜப்பானில் இருக்கின்றன. உலகையே உலுக்கிய செர்னோபில் அணு உலை விபத்தோ, த்ரீ மைல் தீவு அணு உலை விபத்தோ, ஜப்பானின் அணு சக்திக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அதே சமயம், நிலநடுக்க அபாயப் பகுதிக்குள் இருப்பதால், வேறு எந்த நாட்டையும்விடக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உருவாக்கப்பட்டவை ஜப்பானிய அணு உலைகள்.

                    இந்தச் சூழலில், தொழில் துறை சார்ந்த முன்னேறிய நாடு என்ற அந்தஸ்தை எட்ட, அணுசக்தி எரிபொருள்தான் சரியான தீர்வு என்பதற்கு முன்னுதாரணமாக இருந்த ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை பற்றி எரிவது, உலகையே அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஃபுகுஷிமா அணு உலைக்கு நேர்ந்திருக்கும் நிலை, இத்தனை நாட்கள் அணு சக்திக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு இருந்தவர்கள் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாடும் அதிர்ச்சியோடு பார்க்கின்றன. சரி, நாம் என்ன செய்யப்போகிறோம்? நியாயமாக 2004-ல் சுனாமி தாக்குதலுக்கு இந்தியா ஆளான போதே, நாம் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்க  வேண்டும். நகைமுரணாக அதற்குப் பின்தான் நம்முடைய அணுசக்தித் துறை  மேலும் வலுப்படுத்தப்பட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்கள் நலனுக்கு எதிரான அணு விபத்து இழப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜப்பானுடன் ஒப்பிட்டால், இந்திய அணு உலைகள் பலவீனமானவை மட்டும் அல்ல... பல மடங்கு பேராபத்துகளை உருவாக்கக் கூடியவையும்கூட!

                    அணு சக்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பி. உதயகுமார், ''இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய கடைசித் தருணத்தில் இருக்கிறது’’ என்கிறார். ''அணுசக்தி எந்த விதத்தில் பார்த்தாலும், அபாயகரமானது. அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பது வடிகட்டிய பொய். இதைத்தான் இயற்கை, ஃபுகுஷிமா சம்பவம் மூலம் மனித குலத்துக்கு மீண்டும் சொல்கிறது. இதுவரை ஃபுகுஷிமா அணு உலையைச் சுற்றி கதிரியக்கப் பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து 6 லட்சம் மக்களை வெளியேற்றி இருக்கிறது ஜப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த அணு உலை உருகி, கதிரியக்கப் பேரபாயமாக மாறிவிடும். இனி, அந்த இடம் எந்தக் காலத்திலும் மக்களால் திரும்பவே முடியாத இடமாகிவிடும். ஆனால், கதிரியக்கப் பாதிப்புகளை தலைமுறை தலைமுறையாக அவர்கள் அனுபவிக்க வேண்டி வரும். இந்தியாவில் இப்படி ஒரு நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்!'' என்கிறார் உதயகுமார்.

                    அணுசக்தித் தொழில்நுட்பத்துக்கு எதிராகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் சூழல் பாதுகாப்புக்கான மருத்துவக் குழுவின் உறுப்பினர், மருத்துவர் வி.புகழேந்தி, ''இந்திய அரசு இனியாகிலும் தன் மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்'' என்கிறார். ''ஜப்பான் அணு உலைகள் 8.5 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பங்களைத் தாங்க வல்லவை. ஆனால், இந்தியாவில் உள்ள அணு உலைகளோ 5.6 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பங்களை மட்டுமே தாங்க வல்லவை. தவிர, இந்திய அணு உலைகளில் பேணப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை ஏட்டளவிலானவை மட்டுமே. கல்பாக்கத்தில் ஒரு முறை விபத்து ஒத்திகை நடந்தபோது, அணு மின் நிலையத்தில் இருந்த வாக்கிடாக்கிகள் செயல்படவில்லை. நம்முடைய பாதுகாப்புக் கட்டமைப்பின் லட்சணம் இதுதான். இப்போது எல்லோரும் ஜப்பானைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால், 2004-ல் சுனாமித் தாக்குதல் ஏற்பட்டபோது, இங்கே கல்பாக்கத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேச இன்னும்கூட ஆட்கள் இல்லை. கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைக்கும் கதிர்வீச்சு இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு சதுரங்கப்பட்டினம் என்ற கிராமத்தில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டோம். ஏராளமானோர் புற்றுநோய்க்கு ஆளாகிஇருப்பது தெரிய வந்தது. ஆனால், அதை அனல் மின் நிலைய நிர்வாகம் மறுக்கிறது. அரசும் உண்மையை மறைக்கிறது. இந்தியாவில் உள்ள எந்த ஓர் அணு உலையைச் சுற்றிலும் இத்தகைய பாதிப்புகளை நாம் பார்க்க முடியும். பொது மருத்துவர்களையோ, நிபுணர்களையோகொண்டு ஆய்வு மேற்கொண்டு இதை நிரூபிக்க முடியும். ஆனால், அரசு தயாராக இல்லை. இங்கு நடக்கும் விபத்துகள்கூட மூடி மறைக்கப்படுகின்றன. இந்த விஷயங்களை அரசு மறுக்கலாம்; ஆனால், இல்லை என்று நிரூபிக்க முடியாது'' என்கிறார் புகழேந்தி.

                    இந்தியாவின் மீது பிற நாடுகள் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த முற்படக் கூடாது என்பதற்காக, ஏராளமான அணு ஆயுதங்களை நம்முடைய அரசு உருவாக்கி இருக்கிறது. அதை மீறி அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அவற்றை வழி மறித்துத் தாக்குவதற்கான ஏவுகணைகளையும் ஏராளமாக வைத்திருக்கிறது. ஆனால், அணுகுண்டுக் குவியல்போல நாடெங்கிலும் நாம் உருவாக்கி இருக்கும் அணு உலைகள் மீது இயற்கை குறிவைத்தால், அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது நம்முடைய அரசு?
ஆனந்த விகடன் மார்ச் 2011

1 கருத்து: