காலை உணவுத் திட்டம்!



இந்தியாவின் பிரச்சினைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது? அது பயன்படுத்திக்கொள்ளாமல் வீணாக்கும் வளங்களில்தான் இருக்கிறது!

அரசின் உணவுக் கிடங்குகளில் வீணாகும் 25 லட்சம் டன் உணவுத் தானியங்களை ஏழை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பின், வீணாகும் தானியங்கள்பற்றி நாம் பேசுகிறோம். இந்தியாவில் இது ஆண்டுதோறும் நடக்கிறது. எப்போதுமே அளவுக்கு மிஞ்சிதான் அரசு உணவுத் தானியங்களை இருப்பு வைத்திருக்கிறது. அதே சமயம், இந்தக் காரணத்துக்காக கொள்முதலையும் அரசு குறைத்துக்கொள்ள முடியாது. அதனால், குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பின், கிடங்குகளில் கூடுதல் இருப்புள்ள தானியங்களை அவை நல்ல நிலையில் இருக்கும்போதே விநியோகித்துவிடுவதே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். நீதிமன்றம் இப்போது அதைத்தான் சொல்கிறது. ஆனால், மக்களிடத்தில் எந்த வகையில் இந்தத் தானியங்களை விநியோகிப்பது என்பதில் அரசாங்கத்துக்குக் குழப்பம் இருக்கிறது. இந்நிலையில், நாம் ஏன் இந்தத் தானியங்களை நம்முடைய குழந்தைகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? 


உலக வங்கியின் கணக்குப்படி, உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49% பேர்; ஊட்டச்சத்துக் குறைவால் வளர்ச்சி தடைபட்டுள்ள குழந்தைகளில் 34% பேர்; அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளில் 46% பேர் இந்தியக் குழந்தைகளாக இருக்கிறார்கள். உலகப் பட்டினிக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 88 நாடுகளில் 66-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. பட்டினியின் அடையாளமாக நாம் பார்க்கும் பல ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான நிலையில் இருக்கிறது நம்முடைய பல மாநிலங்களின் நிலை.

உலகின் மிகப் பெரிய உணவு வழங்கும் திட்டமான மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு சிறப்பானதோ தரமானதோ இல்லை. நாட்டிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டத்தின் கீழ் சிறப்பான உணவு வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு குழந்தைக்கான உணவுக்கு தமிழகத்திலேயே ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா? தினமும் 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 1 கிராம் எண்ணெய், 20 பைசா காய்கறிகள், 8.5 பைசா மளிகைப் பொருட்கள். தவிர, வாரம் 3 முட்டைகள்; வாரத்தில் ஒரு நாள் 16 பைசா உருளைக்கிழங்கு, 20 கிராம் பாசிப்பயறு அல்லது கொண்டக்கடலை. ஒரு குழந்தைக்கான ஒதுக்கீடு இவ்வளவுதான். இத்தகைய ஒதுக்கீட்டில் முறைகேடுகள் போக எஞ்சும் பொருட்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவின் தரத்தையும் ருசியையும் விவரிக்கத் தேவையில்லை. ஆனாலும், இந்தியாவில் மதிய உணவுக்கு 12 கோடிக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களை நம்பியிருக்கின்றனர் என்றால், இது அவர்களுடைய வறுமையையும் பசியையும் தவிர வேறு எதைக் காட்டுகிறது? இந்நிலையில், ஏன் நாம் இந்தக் குழந்தைகளுக்குக் காலை உணவும் வழங்கக் கூடாது? திருச்சியிலுள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலையில் உணவு வழங்குகிறார்கள். மிக எளிய உணவு: பொன்னி குறுநொய்க் கஞ்சி; புதினா துவையல். இதன் அடுத்த பரிணாமமாக, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கல்வியாளர் எஸ்.சிவக்குமாரின் முன்முயற்சியில், தனியார் பங்களிப்புடன் திருச்சி பகுதியில் ஏறத்தாழ 40 பள்ளிகளில் இன்றைக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவரவர் வசதிக்கேற்ப உணவு வழங்குகிறார்கள்.

தமிழகத்தில் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் ர.கருப்பையன் இன்னும் ஒருபடி மேலே போய் நாட்டுக்கே வழிகாட்டுகிறார். தனியார் பங்களிப்புடன் அவருடைய பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் விளையும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியைத் தன் மாணவர்களுக்குக் காலை உணவாக அவர் அளிக்கிறார். பள்ளியில் படிக்கும் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள் உடல்நலத்தில் நல்ல மாற்றத்தை இந்த உணவு ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார். காலை உணவு வழங்கப்படும் அனைத்துப் பள்ளிகளிலுமே மாணவர்கள் சேர்க்கை, வருகைப் பதிவு அதிகரித்திருப்பதாகவும் வகுப்பில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் கற்கும் திறன் மேம்பட்டிருப்பதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசு ஏன் காலை உணவுத் திட்டத்திலும் முன்னோடியாக இருக்கக் கூடாது? சென்னை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி, 1923-ல் மதிய உணவுத் திட்டத்துக்கு அச்சாரம் இட்டது நீதிக் கட்சி அரசு. ஆனாலும், தமிழகம் முழுவதும் முழுமையான புரட்சித் திட்டமாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை, காலம் பின்னாளில் முன்னாள் முதல்வர் காமராஜருக்குத்தான் வழங்கியது. அதேபோன்ற இன்னொரு வாய்ப்பு - காலை உணவுத் திட்டம் மூலம் தமிழக முதல்வரின் முன் வந்திருக்கிறது. முதல்வர் என்ன செய்யப்போகிறார்?



2010 தினமணி


பிற்சேர்க்கை:
இந்தக் கட்டுரைக்கு அரசின் எதிர்வினை:

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக