நீதிமன்றச் சீர்திருத்தங்கள்

    
   கடந்த சில மாதங்களாகவே இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் தொடர்பான விவாதம் தேசிய அளவில் பரவலாகிவருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், தான் பங்கேற்கும் ஒவ்வொரு விழாவிலும் இதுகுறித்து பேசுவதும்கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய பலகீனமே அதன் தாமதம்தான். உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதிலும் 3.56 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை தவிர ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 1.5 கோடி வழக்குகள் பதிவாகின்றன. "கீழமை நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 2.52 கோடி வழக்குகள் பைசல் செய்யப்படாமல் தேங்கியுள்ளன'' என்கிறார் மத்திய சட்டத் துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ்.
    சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தொடுக்கப்பட்ட எத்தனையோ வழக்குகள் இன்னனமும் நம் நீதிமன்றங்களில் இழுத்துக்கொண்டிருக்கின்றன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 175 ஆண்டு பழமையான வழக்கு ஒன்று இன்னமும் நிலுவையில் இருக்கிறது. ஷோவாபஷார் பரம்பரையைச் சேர்ந்த ராஜா ராஜ்கிருஷ்ணா தேவ் 1823-ல் இறந்தவுடன் அவருடைய சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கு இது. நம்முடைய உச்ச நீதிமன்றத்தில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. "உலகில் வேறு எந்த உச்ச நீதிமன்றத்திலும் இத்தகைய நிலை கிடையாது'' என்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். "இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்'' என்கிறார் ஒரிஸா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.எஸ். சௌகான்.
    நம் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிக்க 10,000 புதிய நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், நாட்டிலுள்ள 15 ஆயிரம் நீதிமன்றங்களில் 11,600 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்படுகின்றன. நீதிபதி மற்றும் ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மீதமுள்ள நீதிமன்றங்கள் செயல்படவில்லை. நாட்டிலேயே அதிகபட்சமாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 160 நீதிபதி பணியிடங்களில் சரி பாதி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
நிலுவை வழக்குகளைக் குறைக்க பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் அதிக அளவில் நீதிமன்றங்களை நிறுவுவதும் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளை நியமிப்பதோடு காலிப் பணியிடங்களை நிரப்புவதும் அதில் முக்கியமான யோசனையாகும். ஆனால், இது அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டிய விஷயம் என்பதாலும் இப்பிரச்னையை எந்த மாநில அரசும் அத்தியாவசியமான ஒரு பிரச்னையாகக் கருதாததாலும் இந்த யோசனை காலங்காலமாகப் பேசப்படுவதோடு முடிந்துவிடுகிறது.
    இந்நிலையில், கூடுதல் நீதிமன்றங்கள், கூடுதல் நீதிபதிகள், காலிப் பணியிடங்கள் தொடர்பாக மேலும் மேலும் பேசிக்கொண்டிருப்பதைவிடவும் நீதித் துறை தன்னளவில் சில முயற்சிகளை முன்னெடுப்பது இப்பிரச்னையைத் தீர்க்க பயனுடையதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில், வழக்குகளின் நிலுவைக்கு நீதிமன்றங்கள், நீதிபதிகள் எண்ணிக்கை குறைபாடு மட்டுமே காரணம் இல்லை. நம்முடைய நீதித் துறையின் அடிப்படைக் கட்டமைப்பிலும் ஏராளமான கோளாறுகள் இருக்கின்றன.
*நீதிமன்றங்களின் வேலைநாட்களை அதிகரிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் வெளியிட்டிருக்கும் வரும் ஆண்டுக்கான விடுமுறை நாள் பட்டியலின்படி, அரசு விடுமுறை நாட்களாக 74 நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில், கோடைக்கால விடுமுறை மற்றும் தசரா விடுமுறை மட்டும் 48 நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நீதித் துறையில் மட்டுமே இத்தனை விடுமுறை நாட்கள் சாத்தியம். போட்டியும் அதீத உழைப்பும் எல்லா துறைகளிலும் கட்டாயமாகிவிட்ட நிலையில், யதார்த்துக்கு உதவாத நடைமுறைகளை நீதித் துறை இன்னமும் கட்டியழுவது அபத்தமானது. நீதித் துறையின் விடுமுறை நடைமுறையில் அவசியம் மாற்றம் தேவை. வார இறுதி நாட்களும் மத்திய அரசின் பிற துறைகளுக்கான பொது விடுமுறை நாட்களும் நீதித் துறைக்கும் போதுமானது. இந்த ஒரு மாற்றம் நிகழ்ந்தாலே இந்திய நீதிமன்றங்களில் இப்போது விசாரிக்கப்படும் வழக்குகள்போல இரு மடங்கு வழக்குகளை விசாரிக்க முடியும்.
*ஒரு வழக்குக்காக ஆயிரக் கணக்கான பக்கங்கள் திரட்டப்படுவது இந்திய நீதித் துறையில் சர்வ சாதாரணமானதாக இருக்கிறது. இத்தனைப் பக்கங்களையும் நீதிபதி படித்தாக வேண்டும் என்பது இதைவிடவும் மோசமானது. நீதித் துறையின் நடைமுறைகளை எளிமைப்படுத்தப்படுத்த வேண்டும்.
*வாய்தாக்களிடமிருந்து இந்திய நீதித் துறையை மீட்டெடுக்க வேண்டும். நியாயமான - அத்தியாவசியமான சூழல்களில் மட்டுமே வாய்தா பெற முடியும் என்ற சூழலை உருவாக்க வேண்டும்.
*குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வழக்குகளை முடிக்காமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கும் வழக்குரைஞர்கள் சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதிகளுக்கு இழப்பீடு வழங்க வகைசெய்ய வேண்டும்.
*வழக்குரைஞர்களின் நியாயமற்ற பணிப்  புறக்கணிப்புப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
*ஒவ்வொரு நீதிமன்றமும் இலக்கு நிர்ணயித்து குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் தன் வசம் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும். கர்நாடகத்தில் விசாரணையில் உள்ள 2.8 லட்சம் சிறு வழக்குகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நல்ல முன்னுதாரணம் இது. உச்ச நீதிமன்றமும் இத்தகைய ஒரு திட்டத்தை முன்னெடுக்கலாம்!
2008, தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக