பாகிஸ்தான் சொல்லும் சேதி என்ன?

      "தேசம் தற்கொலை செய்துகொள்வதுபோல் இருக்கிறது''-முஷாரப் சொன்னது. யாரிடமிருந்து எப்படியொரு வாக்கியம்! வரலாற்று முரண் என்பது இதுதான் போலும். ஆனால், பாகிஸ்தானின் இன்றைய நிலையை அப்படியே சொல்லிவிட இந்த வாக்கியத்தைவிடவும் பொருத்தமான வாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

பாகிஸ்தானின் இன்றைய நிலை அப்படித்தான் உள்ளது. முக்கியத் தொழிலான வேளாண்மை புறக்கணிக்கப்பட்டிருப்பதால் கிராமப்புறங்களில் வாழும் 68.5 சதவீத மக்கள் மோசமான எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். எல்லைப்புற மாகாணங்களை வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையவில்லை. வேலைவாய்ப்பின்மை இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி இருக்கிறது. நாட்டின் 28.3 சதவீதத்தினர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். 44 சதவீதத்தினருக்கு அடிப்படை கல்விக்கூட அளிக்கப்படவில்லை. பொருளாதாரம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் உயர்ந்திருக்கிறது. நிகழ் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் அந்நாடு பெற்றிருக்கும் வெளிநாட்டுக் கடன் ரூ. 1.6 லட்சம் கோடி. நீதித் துறையோ முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது.
      பயங்கரவாத இயக்கங்களுடன் உள்ள உறவை பாகிஸ்தான் ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. ஆனால், இப்போதுள்ள நிலைமையே வேறு. பாகிஸ்தான் அரசுக்கே எதிராக திரும்பியுள்ள பயங்கரவாதிகள் எல்லைப்புற மாகாணங்களைத் தம் வசப்படுத்திவருகின்றனர். ஸ்வாத், ஷாங்லா மாவட்டங்கள் அவர்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. வஜிரிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தார்பலாவிலும் சர்கோதாவிலும் ராணுவத் தளங்கள் சூறையாடப்பட்டன. மிராலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் சிறைப் பிடிக்கப்பட்டனர். மிராலியில் சரணடைந்த  நூற்றுக்கணக்கான வீரர்கள் பயங்கரவாத இயக்கத்தினருடன் ஐக்கியமாகி இருக்கலாம் என்று அரசே சந்தேகிக்கிறது. தீவிரவாதிகளுடன் போரிட மறுத்த 400 வீரர்கள் மீது ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. கராச்சியை எந்நேரமும் பயங்கரவாதிகள் கைப்பற்றலாம் என்று அந்நாட்டு உளவுத் துறை அரசுக்குத் தொடர்ந்து எச்சரிக்கைகளை அனுப்பிவருகிறது.
      கடந்த ஆண்டில் மட்டும் அந்நாடு 50-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதல் உள்பட 160-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறது. இத்தாக்குதல்களில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்; 2000 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். எங்கே, எப்போது, என்ன நிகழும் என்று தெரியாத அபாயச் சூழல் அந்நாட்டின் தலைவர்கள் முதல் சாதாரண குடிமக்கள் வரை ஒவ்வொருவர் மீதும் கவிந்திருக்கிறது.
    வளமிக்க பாகிஸ்தான் ஏன் இப்படி ஆகிவிட்டது? பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கு என்ன காரணம்?
    ஒரு நாட்டின் அரசியலில் அதன் எதிரி நாட்டின் மீதான அரசியல் ஓரளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தலாம்; அந்தத் தாக்கமே முழு அரசியலாகவும் மாறிவிடக்கூடாது!  
2007 தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக