தேவை துணை நகரமல்ல

       
   காலங்காலமாகவே ஆட்சியாளர்களுக்கு மாற்றுத்  தலைநகரம், துணை நகரங்களைத் திட்டமிடுவதில் ஓர் அலாதியான ஆர்வம் இருந்திருக்கிறது. நவீன காலத்தின் மக்களாட்சி மன்னர்களை மட்டும் இதற்கு விதிவிலக்காகப் பார்க்க முடியுமா என்ன?
        சென்னை மட்டுமல்ல; இந்தியப் பெருநகரங்கள், மாநகரங்கள் அனைத்துமே நகர்மயமாதலின் மோசமான விளைவுகளைச் சந்திக்கத் தொடங்கிவிட்டன. இட நெருக்கடி, குடிநீர்த் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் கேடு என்று நம்முடைய நகரங்கள் வாழத் தகுதியற்றவையாகிவருகின்றன. இயற்கைக்கும் நகரங்களுக்கும் இடையேயான அந்நியமாதல் இயந்திர கதியில் நடந்துவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் துணை நகரம் ஒரு நல்லத் தீர்வென்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால், துணை நகரங்கள் அமைப்பதன் மூலமாக பெருநகரங்களின் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா என்ற கேள்விக்கு முன், நாம் பதிலளிக்க வேண்டிய கேள்வி பெருநகரங்களின் இந்நிலைக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதேயாகும்.
      சென்னையையே எடுத்துக்கொள்வோம். நாள்தோறும் ஏறத்தாழ 45 லட்சம் பேர் சென்னையில் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களில் வெளியூர்களிலிருந்து வந்து செல்வோர் எண்ணிக்கை கணிசமானது. 

    நாள்தோறும் இத்தனை பேர் என்ன காரணத்துக்காக இங்கு வந்து செல்கிறார்கள்?; சென்னையில் வசிப்போரில் பூர்வக்குடிகள் எத்தனை பேர்?; குடியேறியவர்கள் எத்தனை பேர்? இப்போது துணை நகரம் அமைக்கப்பட்டால் சென்னையில் வசிப்போர் எத்தனை பேர் அங்கு குடிமாறிச் செல்வர்?
       சென்னை வந்து நிற்கும் ஒவ்வொரு பஸ்ஸிலிருந்தும் சராசரியாக 3 பேர் வேலைவாய்ப்பைத் தேடி இறங்குகின்றனர். இன்னும்... வழக்கு விசாரணைக்காக, மேலதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காக, சினிமா கனவுகளுக்காக, பிரபலங்களைக் காண்பதற்காக...

   அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவித்ததன் பலன் இது. சமச்சீரற்ற வளர்ச்சியை ஊக்குவித்த ஒரு தேசம் அதன் பின்விளைவுகளைச் சந்தித்தேத் தீர வேண்டும். துணை நகரங்கள் அமைக்கப்படுவதால் நகரங்கள் பெருவணிக மையங்களாகத்தான் மாறுமேயன்றி அடிப்படை வசதிகள் மேம்படாது. 
   துணை நகரத்தை அரசு அமைக்காவிடினும் பெருநகரங்கள் காலச்சூழலில் விரிவடையத்தானே செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். ஆம். விரிவடையத்தான் செய்யும். ஆனால், அதற்கு மேலும் பல ஆண்டுகளாகலாம். மாறாக, அரசே அதைச் செயலாக்கும்போது விரிவாக்கம் துரிதமாக்கப்படுவதுடன் துணை நகரங்களைச் சுற்றி மேலும் புது நகர்கள் உருவாகும். துரிதமாக்கப்படுவது விரிவாக்கம் மட்டுமல்ல; அழிவும்தான்.
    நம்மில் பெரும்பாலானோருக்கு விவசாயம் செய்யப்படாத நிலங்களின் பயன் தெரிவதில்லை. தரிசு நிலம் என்றால் பயனற்றது என்றே கருதுகிறார்கள். உண்மையில், இயற்கைச் சுழற்சி முறையில் பயனற்றது என்ற சொல்லுக்கே இடமேயில்லை. பல்லுயிரியம் என்னும் இருத்தலுக்கான அடிப்படையே கிராமங்களை அழிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தகர்ந்து போகும்.
    அதேசமயம், சென்னை மட்டுமல்ல, படிப்படியாக அனைத்து நகரங்களும் இப்பிரச்னையைச் சந்தித்தே தீர வேண்டும். ஆகையால், இதை நாம் அப்படியே விட்டுவிடவும் முடியாது. எனில், என்ன தீர்வு?
     நாடெங்கும் சமச்சீரான வளர்ச்சி வேண்டும். கிராமங்கள் சுயச்சார்பில் இயங்கத்தக்க வகையிலான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  நகரங்களில் கிடைக்கும் அதே வசதிகள் - குறிப்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் - அனைத்துக் கிராமங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். நாட்டின் பிரதான தொழிலான வேளாண் துறைக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகேற்ப தொழில்சார் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அரசுத் துறைத் தலைமையகங்களை அந்தந்தத் துறைசார் தொழில்கள் நடைபெறும் பகுதிகளுக்கு இடமாற்ற வேண்டும். வாகனக் கட்டுப்பாடு, பெருநகரங்களைச் சுற்றி புதிய குடியிருப்புப் பகுதிகள் விரிவாக்கம் - தொழிற்பேட்டைகள் உருவாக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்படி நிறைய வேண்டும். விஷயம் சிக்கலானது. ஆண்டாண்டுகளாய் நாம் செய்த தவறுகளின் நீட்சி இது. நமது அனைத்துத் தவறுகளுக்கும் ஒரே திட்டம் தீர்வாகிவிடும் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள மட்டுமே உதவும். 
    ஆகையால், ஒரு நீண்ட பயணத்தை நாம் தொடங்க வேண்டும்; இங்கிருந்து, இப்போதிலிருந்து, ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து, ஒரு நீண்ட பயணத்தை நாம் தொடங்க வேண்டும், எதை நோக்கி? கிராமங்களை நோக்கி; துணை நகரங்களை நோக்கி அல்ல.
2006, தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக